Monday, October 25, 2010

காமன்வெல்த்: ஊழல்வாதிகளை ஆட்டம் போட வைத்தது யார்?

காமன்வெல்த்: ஊழல்வாதிகளை ஆட்டம் போட வைத்தது யார்? 0
Who made the politicians dance to drums in CWG Corruption? - Tamil Katturaikal - General Articles "வி.கே.ஷங்லு விசாரணைக் கமிட்டி" காமன்வெல்த் போட்டிகளில் நடந்த ஊழல் முறைகேடுகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவின் பெயர். கண்துடைப்பாக முடியப் போகிறதா அல்லது கல்மாடி மீது கைவைக்கப்படுமா என்பது கடைசியில்தான் தெரியும். "பல ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் செலவிடப்பட்டு நடத்தப்பட்ட இந்த போட்டிகளில் நடந்துள்ள ஊழல்களை சும்மா விடமாட்டோம்" என்று பி.ஜே.பி. தொடைதட்ட ஆரம்பித்துள்ளதால் தேசிய அரசியல் களை கட்ட ஆரம்பித்துள்ளது.
ஊரே வெட்கி தலை குனியும் அளவுக்கு ஊழலை அரங்கேற்றிவிட்டு, கலர் கலராய் வர்ணஜாலங்களோடு துவங்கி வாணவேடிக்கையாய் முடிந்துவிட்ட ஒரு திகைப்பான சம்பவம்தான் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகள். வெள்ளைக்காரன் எங்கெல்லாம் சென்று கொடிநாட்டினானோ அந்த "முன்னாள் அடிமை நாடுகள்" எல்லாமே அவ்வப்போது ஒன்றுகூடி ஒருமித்து "நாங்கள் வெள்ளையரின் அடிமைகளாய் இருந்தவர்களே" என்று மறக்காமல் பறைசாற்றுவதற்கு வாய்ப்பாக இருக்கும் விசயங்களில் ஒன்றுதான் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்.
போட்டி ஏற்பாடுகள் துவங்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் வாய் திறக்காத மீடியாக்கள், கடைசி நேரத்தில் குய்யோ முய்யோ என குதிக்க ஆரம்பித்தன. மீடியா ஸ்பான்சர்சிப் தராத காரணத்தினால் ஊழலோ ஊழல் என்ற ஒப்பாரியை ஒருசில மீடியாக்கள் செய்தன. டெங்கு கொசுக்கள் டெல்லியை ஆட்டிப்படைப்பதால் சுகாதாரக் கேடு வரப்போகிறது என ஒருபக்கம். ஸ்டேடியங்கள் ஒழுகுவதாக புகார். மழை வெள்ளத்தினால் போட்டி நடக்காது, நடக்கவும் கூடாது என்று ஒரு முன்னாள் அமைச்சர் சாபம் விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு விமானம் பிடித்தார். மிகப்பெரிய நடைபாதை பாலம் அடியோடு சரிந்துவிழுந்தது. இதனால் பிரதமரே நேரடியாக போய் மேஸ்திரி வேலையும் பார்க்க நேர்ந்தது.
இந்தப் போட்டிக்காக ஏ.ஆர்.ரகுமான் போட்டுக் கொடுத்த பாட்டும் பிளாப் ஆகி டர்ரென கிழிய ஆரம்பித்ததும், கல்மாடியே தலையிட்டு, அவசரமாக அது தைக்கப்பட்டு ஃபிரஷ்ஷாக பாட்டு போடப்பட்டு தேசபக்தி ஊட்டப்பட்டது. நன்றாக இருந்த சாலைகள் மீண்டும் போடப்பட்டன. நன்றாக எரிந்து கொண்டிருந்த விளக்கு கம்பங்கள் எல்லாம் பிடுங்கப்பட்டு புதிய கம்பங்கள் நடப்பட்டன.
டெல்லியை பளபளவென ஆக்குவதாக கூறி ஏழைகள், பிச்சைக்காரர்கள், தெருவோர கடைக்காரர்கள் உள்ளிட்ட 4 லட்சத்துக்கும் அதிகமான அன்றாடங்காய்ச்சிகள் எல்லாம் ஊரைவிட்டே துரத்தப்பட்டனர். வெளிநாட்டுக்காரர்கள் கண்ணில் பட்டுவிட்டால் மானம்!? போய்விடும் என்பதற்காக அதுவரைக்கும், ஓடிக்கொண்டிருக்கும் ஓட்டை, உடைசல் தனியார் பஸ்கள் எல்லாம் பதினைந்து நாட்களுக்கு ஊருக்குள் வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது. மாநகரம் முழுக்க திரிந்த நூற்றுக்கணக்கான குரங்குகள், நாய்கள் அனைத்தும் பிடித்துச் செல்லப்பட்டன.
தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட அரசு நிதியெல்லாம் திருப்பிவிடப்பட்டது. பல பொதுத்துறை நிறுவனங்கள் நிதி தரமுடியாது என பிடித்த முரண்டு சரிசெய்யப்பட்டது. இந்தப் போட்டிகளுக்காக டெல்லி மாநில அரசு போட்ட பட்ஜெட்டில் கூடுதல் வரிகளை மக்கள் சுமந்தனர். கேஸ் சிலிண்டர் விலைகூட உயர்த்தப்பட்டது. அரிசியில் ஆரம்பித்து காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள் என அத்தனையும் கூடுதல் விலை கொடுத்து வாங்கினர். இந்தப் போட்டிகள் நடைபெற்று முடியும் வரை டெல்லியில் பள்ளி, கல்லூரி, அலுவலகம் என பணிக்குச் செல்பவர்களின் பாடு நாய் பட்ட பாடாகிவிட்டது.
வெளிநாட்டுக்காரர்கள் வர ஆரம்பித்தவுடன், விளையாட்டு கிராமத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகள் சரியில்லை என்றும் "எச்சில் துப்பி கிடக்கிறது... படுக்கைகள் சரியில்லை... பாம்பு புகுந்துவிட்டது..." என கடைசிநாள் வரை போட்டி ஏற்பாடுகள் மோசமாக இருந்ததாக திரும்பத் திரும்ப அலறிக் கொண்டிருந்த மீடியாக்கள் திடீரென சாந்தமாயின. கேட்டால் "இந்தியாவின் கௌரவம்" என்று புதிய பல்லவியை ஆரம்பித்தன. இத்தனை கொடுமைகளையும் அநீதிகளையும் மக்கள் விலையாக கொடுத்துவிட்டுத்தான் "நாட்டின் கௌரவம்" காப்பாற்றப்பட முடியுமென எந்த நீதிநூலில் உள்ளதோ தெரியவில்லை.
சரி. போட்டிகள் துவங்கின. விளையாட்டுக்களில் வீரர்கள் வெல்லும் பதக்கங்களோடு சேர்த்து, வெளிநாட்டுக்காரர்கள் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்த விளையாட்டு கிராமத்தில் உள்ள காண்டம் வெண்டிங் மெசின்பற்றியும் செய்திகள் வரத்துவங்கின. 40 ஆயிரம் காண்டம் பாக்கெட்டுகள் வைக்கப்பட்டிருந்த வெண்டிங் மெசினில் இருந்து நான்கே நாட்களில் பாதி காண்டம் பாக்கெட்டுகள் தீர்ந்துவிட்டன. மீதியுள்ள நாட்களுக்கு ஸ்டாக் கைவசம் இல்லை என்பதால் புதிதாக ஆர்டர் செய்யப்பட்டது. அதை விடக் கொடுமை... அந்த அடுக்குமாடி குடியிருப்பு பூராவும் குழாயில் திடீரென அடைப்பு ஏற்பட்டது. காரணம் அந்த வீடுகளின் டாய்லெட்டுகளில், பயன்படுத்தப்பட்ட காண்டம்கள் போடப்பட்டதால் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, அதை சரிசெய்ய நூற்றுக்கணக்கான பணியாட்கள் அவசரமாக அழைக்கப்பட்ட கூத்தும் நடந்தது.
இத்தனை விசயங்களைத் தாண்டி தங்கமாக மட்டும் 38ம், மொத்தமாக நூற்றுக்கும் மேலாக பதக்கங்களை வென்று பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்தபோது ஊழலாவது... கீழலாவது... என்று அத்தனையையும் மறந்துவிட்டு இந்தியர்களும் எழுந்துநின்று கைதட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த கைதட்டல் சத்தத்துக்கு மத்தியில்தான் ஒரு குழாயடிச் சத்தம் கேட்கிறது. அதாவது டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்துக்கும் காமன்வெல்த் போட்டி ஆர்கனைசிங் கமிட்டி தலைவர் கல்மாடிக்கும் இடையில்தான் அந்த சண்டை. ஆர்கனைசிங் கமிட்டியில் வேண்டுமானால் ஊழல் நடந்திருக்கலாம் என்று ஷீலா சொல்ல, டெல்லி மாநில அரசுதான் ஊழல் செய்திருக்க வேண்டுமென்று கல்மாடி பதிலடி தந்துள்ளார்.
ஷீலாவையும், கல்மாடியையும் மட்டும் குற்றவாளிகள்போல மீடியாக்கள் சித்தரிக்கின்றன. ஆனால் ஒரே ஒரு சந்தேகம். இவர்கள் இருவருமே காங்கிரஸ் தலைமையின் கண்ணசைவில்தான் அந்தந்த பொறுப்புகளுக்கு வந்தவர்கள். இவர்கள் இந்த அளவு ஆட்டம் போடுவதற்கு காரணமாக இருந்த "தலைமை" பற்றி விமர்சிக்கவோ, கேள்வி கேட்கவோ மீடியாக்கள் மறுப்பது ஏனோ தெரியவில்லை!

No comments:

Post a Comment