Tuesday, October 26, 2010

ரன்னர் (

ரன்னர் ( The Runner - Tamil Katturaikal - General Articles
வாழ்க்கையில் எந்தெந்தத் தருணங்களில் எல்லாம் நீங்கள் ஓடியிருக்கிறீர்கள்? ஒரு ரயிலைப் பிடிப்பதிலிருந்து வாழ்க்கையின் பல வாய்ப்புகளை அடைவது வரை நாம் பின்தங்கும் போதெல்லாம் ஒடத் தொடங்குகிறோம். இழந்ததை அடைவதற்காக, அடைந்ததை இழக்காமல் இருப்பதற்காக நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம். அது போல, உயிர்வாழ்தலுக்காக ஓடிக்கொண்டே இருந்த சிறுவனின் கதை... "Runner"!
பரந்த கடற்கரை. அதில் தனியாக நிற்கும் அநாதைச் சிறுவனான அமிரோ, கரைக்கு வரும் கப்பலை நோக்கிக் கத்துகிறான். பிறகு, விமானம் தரை இறங்கும் இடத்துக்கு வந்து, அது தரை இறங்குவதைக் கம்பி வேலி வழியே பார்க்கிறான். பின்பு, கடற்கரையில் கப்பல் வந்து போனதும், அங்கு சேர்ந்திருக்கும் கழிவுகளிலிருந்து பழைய பொருட்களைப் பொறுக்கி எடுத்துப்போய் காயலான் கடையில் போட்டுக் காசு வாங்குகிறான்.
மறுநாள், இன்னும் சில சிறுவர்களோடு துறைமுகத்துக்குப் போகிறான். கப்பலில் இருந்து எறியப்பட்ட பாட்டில்கள் கடலில் மிதந்துகொண்டு இருக்கின்றன. அவற்றைச் சேகரிக்கும் சிறுவர்கள் கடற்கரையில் அமர்ந்து, தாங்கள் சேகரித்த பாட்டில்களை எண்ணும்போது, அமிரோ எடுத்த இரண்டு பாட்டில்களைத் தான்தான் முதலில் பார்த்ததாகச் சொல்லிப் பார்க்கிறான் ஒரு சிறுவன். அமிரோ கொடுக்க மறுக்க, எல்லோருமாகச் சேர்ந்து அவனைக் கீழே தள்ளி அடிக்கிறார்கள். அவன் எடுத்த பாட்டில்களைப் பறித்துக் கொள்கிறார்கள். மீதமிருக்கும் ஒரு சில பாட்டில்களை மட்டும் அமிரோ கடையில் கொடுத்து பணத்தை வாங்கிக்கொண்டு சோகமாக நடக்கிறான்.
கரையோரம் மணலில் பழுதாக நிற்கும் பழைய கப்பலின் மீது ஏறி, சுற்றிப் பார்க்கிறான். அதிலேயே தங்குகிறான். தன்னிடம் இருக்கும் ஒரே பனியனைத் துவைத்துக் காய வைக்கிறான்.
மறுநாள், துறைமுகத்தில் வெளிநாட்டுக்காரர்கள் சாப்பிடுவதை வேடிக்கை பார்க்கிறான். பிறகு, தான் தங்கியிருக்கும் கப்பலுக்கு வருகிறான். குப்பை பொறுக்கும் சக நண்பர்கள் அவனைத் தேடி வருகிறார்கள்.
"நாங்க எல்லாம் வாடகை சைக்கிள் எடுத்து ஓட்டப்போறோம். நீ வர்றியா?" எனக் கேட்க, அமிரோ மகிழ்ச்சியாக அவர்களுடன் கிளம்புகிறான். சிறுவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து சைக்கிளில் சுற்றுகிறார்கள். யார் முதலில் வருவது என்று அவர்களுக்குள் போட்டி நடக்கிறது. பிறகு அவர்களுக்குள் ஓட்டப்பந்தயம் நடக்கிறது. அதில் அமிரோவும் கலந்துகொண்டு ஓடுகிறான்.
வருமானத்துக்கு வழியில்லாத அமிரோ, வேறு தொழில் செய்யலாமென நினைத்து, அந்தத் துறை முகத்தில் குளிர்ந்த நீர் விற்கத் துவங்குகிறான். "ஐஸ் வாட்டர்.... ஐஸ் வாட்டர்" என்று கூவி, இரும்பு வாளியில் தண்ணீர் வைத்துக்கொண்டு, கேட்கிறவர்களுக்கு கண்ணாடி டம்ளரில் ஊற்றிக் கொடுத்து சில்லறை வாங்குகிறான்.
சம்பாதித்த காசை எடுத்துக்கொண்டு அங்கிருக்கும் சாலையோர புத்தகக் கடைக்குப் போகிறான். பத்திரிகைகளின் விலையைக் கேட்கிறான். கடைக்காரர் அழுக்கான அவன் தோற்றத்தைப் பார்த்து, "இது விலை அதிகம்" என்று சொல்லி, அந்தப் பக்கம் இருக்கும் பழைய இதழ்களைக் காட்ட, அதில் விமானப் படம் அச்சிடப்பட்ட இதழ்களை வாங்கிக் கொள்கிறான். அதை எடுத்துக்கொண்டு, விமானம் இறங்கும் இடத்திற்கு வருகிறான். கையிலிருக்கும் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டி, எதிரில் நிற்கும் விமானம் தன்னிடம் இருக்கும் படங்களுடன் பொருந்திப் போகிறதா என்று ஒவ்வொரு படமாக ஒப்பிட்டுப் பார்க்கிறான். கடைசியில் ஒரு படம் எதிரில் நிற்கிற விமானம் போலவே இருக்க, மகிழ்ச்சியில் சிரிக்கிறான்.
தான் வாங்கி வந்த பத்திரிக்கைகளில் இருக்கும் விமானங்களின படங்களை வெட்டி, தான் தங்கியிருக்கும் கப்பலில் ஒட்டிவைக்கிறான். கடலில் பெரிய கப்பல்கள் வரும்போது கரையில் நின்று, "என்னையும் அழைத்துப் போங்கள்" என்று குரல் எழுப்பிக் கத்துகிறான்.
ஒரு நாள், பாட்டில் எடுக்கும் சிறுவர்கள் அனைவரும், வழக்கமாக நடக்கும் ஓட்டப்பந்தயத்துக்குத் தயாராகிறார்கள். ரயில் வந்ததும், அது ஸ்டேஷனில் போய் நிற்கும்முன், அதை யார் ஓடித் தொடுவது என்பது போட்டி. பந்தயம் துவங்குகிறது. கூட்டத்தில் இருக்கும் ஒருவன் வேகமாக ஓடி ரயிலைத் தொட்டுவிட்டு, "நான்தான் முதலில் தொட்டேன்" என்று கத்துகிறான். அவனுக்கு பின்னால் ஓடும் அமிரோ, ரயிலைத் தொட முடியாதபோதும், தொடர்ந்து ரயிலின் பின்னே ஓடி நிற்கிறான். சிறுவர்கள் ஆச்சர்யமாக, "அவன்தான் முதல்ல வந்துட்டானே.... அப்புறம் நீ எதுக்கு ஓடினே?" என்று கேட்க, "என்னால் எவ்வளவு தூரம் ஓட முடியும்னு எனக்குத் தெரியணும்ல?" என்கிறான்.
தண்ணீர் விற்கும் வேலையை விட்டுவிட்டு, ஷூ பாலிஷ் போடும் வேலையைச் செய்யத் துவங்குகிறான். ஒரு ரூபாய்க்குத் தண்ணீர் விற்ற அமிரோவுக்கு இப்போது ஷூ பாலிஷ் போட்டால் இரண்டு ரூபாய் கிடைக்கிறது. அந்த வேலையை உற்சாகமாகச் செய்கிறான். பழைய புத்தகக் கடைக்குப் போய், கையிலிருக்கும் காசுக்கு மஞ்சள், ஆரஞ்சு, ஊதா என விதவிதமான விமானங்கள் உள்ள வெளிநாட்டுப் பத்திரிகைகளை வாங்குகிறான். "இதெல்லாம் வாங்குறியே, உனக்கு அந்த மொழி தெரியுமா?" என்று கடைக்காரர் கேட்க, "சும்மா படம் பாக்கிறதுக்காக வாங்குகிறேன்" என்கிறான் அமிரோ. "நீ படிக்கணும்னா நம்ம மொழியிலேயே பழைய பத்திரிகைகள் இருக்கு, வேணுமா?" என்று கடைக்காரர் கேட்க, "எனக்குப் படிக்கத் தெரியாது" என்கிறான். "ஆனா, உன் வயசுல இருக்கிற எல்லோருக்கும் படிக்கத் தெரிஞ்சிருக்கும்" என்று கடைக்காரர் சொல்ல, வருத்தத்துடன் கடற்கரைக்கு வருகிறான்.
"எனக்குப் படிக்கத் தெரியும்; எழுதத் தெரியும். ஏன் என்னால முடியாது?" என்று ஆவேசமாகச் சொல்லிக்கொண்டே, தான் வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் கிழித்துக் கடலில் போடுகிறான். மறுநாளே, அங்கிருக்கும் பள்ளிக்குச் செல்கிறான். ஆசிரியர் ஒருவர் அவனைப் பார்த்து, "என்ன வேணும் உனக்கு?" என்று கேட்க, "சார், நான் இந்தப் பள்ளியில் சேரணும்" என்கிறான் அமிரோ. "இதுக்கு முன்னால எங்கே படிச்சே?" என்று ஆசிரியர் கேட்க, தான் இதுவரை பள்ளிக்கே போனதில்லை என்கிறான். "என்னை ஸ்கூல்ல சேர்க்க எனக்குன்னு யாருமே இல்லை. அதான், நானே வந்துட்டேன்" என்பவனை ஆச்சர்யமாகக் பார்க்கும் ஆசிரியர், "முதல் வகுப்பில் சேர்க்கிற வயசுல நீ இல்லியே" என்கிறார். "சார்.... எப்படியாச்சும் நான் படிக்கணும்" என்கிறான் அமிரோ. மாலையில் நடக்கும் எழுத்தறிவு வகுப்புகளில் அவனைச் சேர்த்துக்கொள்கிறார் ஆசிரியர். வகுப்பில் சேர்ந்த குஷியில், பறந்து வரும் விமானத்தைப் பார்த்து உற்சாகமாகக் கத்துகிறான் அமிரோ.
மறுநாளிலிருந்து வகுப்புகள் தொடங்குகின்றன. உயிரெழுத்துக்களை ஆர்வமாகப் படிக்கத் துவங்குகிறான். பகல் பொழுதுகளில் ஷூ பாலிஷ் போடும் வேலை!
சில நாட்களுக்குப் பிறகு, கடலுக்கு பாட்டில் எடுக்கச் செல்லும் நண்பர்களைச் சந்திக்கிறான். உற்சாகமாக எல்லோரும் விளையாடுகிறார்கள்.
துறைமுகப் பகுதியில் ஓட்டப் பந்தயம் துவங்குகிறது. தூரத்தில் மண்ணெண்ணெய் டிரம் மீது வைக்கப்பட்டிருக்கும் பெரிய ஐஸ் கட்டியை யார் எடுப்பது என்ற போட்டியில், அமிரோ தன் சக்தியையெல்லாம் திரட்டி உத்வேகத்துடன் ஓடி வந்து, ஐஸ் கட்டியை எடுக்கிறான். முதல் முதலாகத் தான் அடைந்த வெற்றியைக் கைகளை உயர்த்தி உற்சாகமாகக் கொண்டாடுகிறான்.
கானல் அலையும் தரையிலிருந்து ஒரு விமானம் வானில் எழும்பிப் பறக்கிறது. அதன் கீழிருந்து, அமிரோ தன்னம்பிக்கையுடன் தான் படித்த உயிரெழுத்துக்களைச் சத்தமாக சொல்லிக் கத்துகிறான். வானிலிருந்து சிறிக் கிளம்பும் விமானத்தின் சத்தத்தையும் மிஞ்சும் விதமாக உத்வேகத்துடன் அமிரோ கத்த, அந்த நம்பிக்கையுடன் படம் நிறைவடைகிறது.
அநாதையாக, வறுமையில் இருக்கும் தன்னைப் பிறர் ஏமாற்றும்போதும், அமிரோ சோர்ந்துவிடாமல் தனக்கான நீதியை தானே உருவாக்குவது, தண்ணீர் குடித்துவிட்டுப் பணம் கொடுக்காமல் சைக்கிளில் விரைகிற ஒருவனை ஓடியே விரட்டிப் பிடிப்பது, தன்னிடமுள்ள ஐஸ் கட்டியைப் பறித்துக்கொண்டு ஒருவன் ஓடும் போது, அவனை விரட்டிச் சென்று, அந்த ஐஸ் கட்டி உருகிச் சிறியதான போதும் அதைத் திரும்பப் பெறுவது, தன்னைத் திருடன் என்று சொன்ன கப்பல் அலுவலரைத் தேடிச் சென்று நியாயம் கேட்பது என ஒவ்வொரு காட்சியும் அமிரோவின் நேர்மையைப் பறைசாற்றுகின்றன.
ரயிலையும், விமானத்தையும் கப்பலையும் பார்க்கும்போதெல்லாம், "என்னை இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள்" என்று குரலெடுத்துக் கத்துவதும், பின்பு இந்தச் சூழலிருந்து விடுபட கல்வி ஒன்றே வழி என்று உணர்ந்து படிக்கப் போவதும், கடைசியில் தலைக்கு மேல் பறக்கும் விமானத்தின் ஒலியை விடவும் குரலெடுத்து உயிரெழுத்துகளைச் சொல்லிக் கத்தும்போது, தனது கல்வி அறிவால் அதைக் கடந்து விட முடியும் என்று குறியீடாகத் தொனிக்கிறனுநம்பிக்கையுமாக... அற்புதமான மனவியல் பதிவுகள்!
அமிரோவாக நடித்த சிறுவனின் நடிப்பு வெகு இயல்பானது. கதையைப் பொருட்படுத்தாமல் இயல்பான சம்பவங்களாலான இப்படம் 1985-ல் வெளியாகி, உலகின் கவனத்தை ஈர்த்தது. இந்த இரான் நாட்டுப் படத்தை இயக்கியவர் அமிர் நதேரி.
பள்ளிக்கு போகமுடியாமல் தெருவோரம் வசிக்கிற குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நம் நாட்டில் ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கொடியேற்றி இனிப்புகள் கொடுத்து நாம் சுதந்திரத்தைக் கொண்டாடும் பள்ளிச் சுவர்கள் ஓரமாக, முதுகில் அழுக்குச் சாக்கோடு குப்பைக் காகிதம் பொறுக்கும் சிறுவர்களை இன்றைக்கும் நாம் பார்க்க முடியும். அமிரோவைப் போல அந்தச் சிறுவர்களுக்குள்ளும் ஒரு கனவு இருக்கத்தானே செய்யும்!
அமிர் நதேரி
இரானில் உள்ள அபாடன் என்னும் துறைமுக நகரில், 1946-ல் பிறந்தார் அமிர் நதேரி. ஐந்து வயதிலேயே அநாதையாகி, தெருவோரம் வளர்ந்தார். திரையரங்கத்தில் குப்பை கூட்டுபவராக வேலை செய்தார். அப்போது நிறைய திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. கதையில் வருகிற அமிரோவைப் போல நிஜ வாழ்க்கையை அனுபவித்த நதேரி, புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். நிழற்படங்கள் எடுப்பவாரத் திரையுலகில் நுழைந்த இவர், 1970-ல் திரைப்பட இயக்குநர் ஆனார். பின்பு எடிட்டர், படத் தயார்ப்பாளர் என அவதாரம் எடுத்த இவர். இப்போது நியூயார்க்கில் வசித்து வருகிறார்!

No comments:

Post a Comment