Friday, November 5, 2010

இராமலிங்க அடிகள் (1823 - 1874)

இராமலிங்க அடிகள் (1823 - 1874)
 
சமயநெறியில் சமரசத்தைப் பரப்ப முன் வந்த பெரியார் இராமலிங்க அடிகள். இறைவன் மீது இவர் பாடிய பாடல்கள், அருட்பா என்ற பெயரில் தொகுக்கப் பெற்றுள்ளன. ஆற்றெழுத்தான உரைநடை நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். இவர் தம் கடிதங்கள் திருமுகப்பகுதியில் தொகுக்கப் பெற்றுள்ளன. வடலூரில் சமரச சன்மார்க்க சங்கத்திற்கெனத் தனிமனை வகுத்து இறைத் தொண்டாற்றி வந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அருட்கவியென இவரைக் குறிப்பிடலாம்.
வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் ஓர் ஆன்மீகவாதி ஆவார். இவர் சிதம்பரத்தில் இருந்து 10மைல் தொலைவிலுள்ள மருதூரில் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மாள். இராமலிங்கர் பிறந்த எட்டாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் குடியேறினார்.
தன் வாழ்வின் பெரும்பகுதியை சென்னையில் வாழ்ந்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்து சமய நல்லிணக்கத்திற்காகவும் (சமரச சமயம்) சன்மார்க்கத்திற்காகவும் (righteousness in all endeavours) தன் வாழ்நாளை அர்ப்பணித்து பணியாற்றினார். இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபை மற்றும் சத்திய தருமசாலை அமைத்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகிறது.
வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினா லிளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றேரென்
நேருறக் கண்டுளந் துடித்தேன்
ஈடின்மா னிகளா யேழைக ளாய்நெஞ்
சிளைத்தவர் தமைக்கண்டே யிளைத்தென்.
- வள்ளலாரின் (அருட்பா - பிள்ளைப் பெரு விண்ணப்பம்)

No comments:

Post a Comment